பிரதமரை திருடன் என மறைமுகமாக சொன்ன இம்ரான் கான் - எம்.பி. பதவியில் இருந்து விலகல்

pakistan imrankhan shehbazsharif
By Petchi Avudaiappan Apr 11, 2022 10:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரீப் பதவியேற்றுள்ள நிலையில் அவரை முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். 

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான் கான் மீது 2வது முறையாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் அவரது அரசு கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இதனிடையே பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷரீஃப் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் இளைய சகோதரர் ஆவார்.

இதனிடையே முன்னாள் பிரதமர் இம்ரான் கானும், அவரது பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாத் (பிடிஐ) கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷரீஃபை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்  நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அடுத்த சில மணி நேரங்களில் இம்ரான் கான் உட்பட அவரது கட்சியினர் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இம்ரான் கான் கோடிக்கணக்கில் ஊழல்களை செய்துள்ள ஒருவர் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க போகிறார். இதை விட ஒரு நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம் எதுவும் இருக்க முடியாது என நினைக்கிறேன். திருடர்களுடன் ஒன்றாக அமர எனக்கு விருப்பமில்லை. அதனால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.