”சிசு கொலையை அனுமதிக்கவே முடியாது” திண்டுக்கல் கொலை வழக்கில் தீவிர நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள ஆயக்குடியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை மங்கையர்க்கரசி (29). இவரது உறவினராக குமார் என்பவரை காதலித்தில் கர்பமாகியுள்ளார். இவர்கள் இருவரும் அக்கா, தம்பி உறவுமுறை என்பதால் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
கர்பத்தையும் கலைக்க முடியாத நிலையில், வீட்டிலேயே ரகசியமாக மங்கையர்கரசிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதில் பிறந்த ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளனர்.
ரத்தப்போக்கு அதிகமாகவே மங்கையர்கரசியை பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீஸார் விசாரணை நடத்தி மங்கையர்கரசியின் தந்தை மணியன், தாய் தங்கள், சகோதரன் காளிதாஸ், காதலன் அபீஸ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தது தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் ரங்கராஜ், முரளிக்குமார் ஆகியோர் இன்று 29.04.21 ஆயக்குடியில் குழந்தை கிணற்றில் வீசப்பட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து பழநி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ஆயக்குடியில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்டது குறித்த விசாரணை அறிக்கை விரைவில் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
திருமணமாகி குழந்தை பிறந்ததா, திருமணமாகாமல் குழந்தை பிறந்ததா என்பது இல்லை பிரச்சனை. எக்காரணத்தை கொண்டும் சிசு கொலையை அனுமதிக்கமுடியாது. பிறந்த குழந்தையை கொலை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.
குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லை எனில் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்திருக்கலாம். இந்த வழக்கை தொடர்ந்து குழந்தை பாதுகாப்பு உரிமைகள் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்கும். குழந்தைகள் நல விவகாரங்களை கவனிக்க குழந்தைகள் நலத்துறை தமிழகத்தில் தனியே அமைக்கப்படவேண்டும்.
மாவட்ட அளவில், நகராட்சி, பேரூராட்சி, வார்டு அளவிலும் குழந்தை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கபடவேண்டும். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலையில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரிப்பது வேதனையாக உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்” எனத் தெரிவித்தார்.