சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை : காவல்துறையினரிடம் வசமாக சிக்கிய நபர்
பொதுவாக கோவில் வாசல்களில் யாசகம் கேட்பவர்கள் அமர்ந்திருப்பது வழக்கம். ஆனால் சாமியார் வேடத்தில் யாசகம் கேட்பது போல் கோவில் வாசல்களில் கஞ்சா விற்பனை செய்து வந்தது சென்னையில் அரங்கேறியுள்ளது
சென்னை மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாமியார் போல ஒருவர் பிச்சை எடுப்பது போல் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் இருசப்பன் தெருவில் உள்ள முருகன் கோவில் வாசலில் சாமியார் போல வேடம் அணிந்த ஒருவரிடம், மறுவேடத்தில் இருந்த போலீசார் கஞ்சா இருக்கிறதா என்று கேட்பதுபோல பேச்சு கொடுத்துள்ளனர். உடனே அவர் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை எடுத்து போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
உடனே அவர் போலீசாரால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் ,அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராயப்பேட்டை யானைக்குளம் பகுதியை சேர்ந்த சேகர் என்று தெரியவந்தது.
சாமியார் வேடத்தில் காவியுடை ருத்ராட்சம் அணிந்து கோவில் வாசல்களில் பிச்சை எடுப்பது போல் அமர்ந்து இவர் கஞ்சா பொட்டலம் விற்பனை விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக இவர் இருக்கும் பகுதிகளில் இளைஞர்களில் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் சேர்ந்த ராஜா, ஆண்டிபட்டி தர்மராஜ புரத்தை சேர்ந்த ஆசைத்தம்பி ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையின் பிரதான பகுதிகளில் பட்டப்பகலில் சாமியார் வேடத்தில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.