கஞ்சா ஆம்லெட் விற்பனை; பிங்க் கலர் பஸ் நிலைதான் திமுகவுக்கு.. தாக்கிய இபிஎஸ்!
தமிழ்நாட்டில் கஞ்சா ஆம்லெட் விற்பனை செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கஞ்சா ஆம்லெட்
நாமக்கல், ராசிபுரம் தொகுதியில் நடந்த பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, தி.மு.க. அரசு ஆட்சியில் 67 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மதுரையில் மேயர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், திருநெல்வேலி மேயர்களுக்கும், கவுன்சிலருக்கும் சண்டை இருந்து வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. கஞ்சா சாக்லேட் வந்து விட்டது.
ஆம்லெட்டில் கூட கஞ்சா ஆம்லெட் வந்து விட்டது என கூறுகிறார்கள். தமிழகம் போதைப்பொருள் விற்பனையால் சீரழிந்து கிடக்கிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் இதுபற்றி சட்டசபையில் நான் பலமுறை பேசினேன்.
இபிஎஸ் விமர்சனம்
ஆனால், அவற்றை எல்லாம் அப்போது கண்டுகொள்ளாத முதல்-அமைச்சர் இப்போது தாமதமாக விழித்து கொண்டு இருக்கிறார். மூன்றரை ஆண்டுகள் கழித்து இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று ஞானம் பிறந்தது போன்று உரையாற்றுகிறார்.
இப்படிப்பட்ட தாமதமாக விழித்து கொள்ளும் முதல்-அமைச்சர் நமக்கு தேவையா? மக்களைச் சந்திக்கும் எனது பேருந்து பயணத்தால் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தூக்கம் போய்விட்டது. பிங்க் கலர் பேருந்துத் திட்டத்தைக் கிண்டல் செய்த உதயநிதி ஸ்டாலின்,
தற்போது அரசுப் பேருந்துகளைப் பராமரித்து இயக்க வேண்டும் என்று கூறுகிறார். பிங்க் கலர் பேருந்தின் நிலையில்தான் தி.மு.க.வின் நிலையும் உள்ளது என்று விமர்சித்தார்.