அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை: மெழுகுவர்த்தி பஞ்சாயத்து தொடர்பில் மேயர் பிரியா விளக்கம்!
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக் கட்டிடத் திறப்பு விழாவில், தவெக எம்.எல்.ஏ. பல்லவிக்கு குத்துவிளக்கேற்ற மெழுகுவர்த்தி வழங்கப்படாததால் அவர் அவமதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் ‘மெழுகுவர்த்தி பஞ்சாயத்து’ என்ற பெயரில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், சென்னை மேயர் பிரியா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை. எம்.எல்.ஏ.வுக்கு உரிய மரியாதை அனைத்தும் வழங்கப்பட்டது. பிரச்சனையை பெரிதுபடுத்த நினைப்பவர்களை என்ன செய்வது?
மேலும், “விழாவிற்கு எம்.எல்.ஏ.வுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவருக்காக காத்திருந்த பிறகே நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
காலை 8.45 மணிக்கு தொடங்க வேண்டிய விழாவிற்கு, எம்.எல்.ஏ. பல்லவி காலை 9 மணிக்குத்தான் வந்தார். அதுவரை அனைவரும் காத்திருந்தோம்” என தெரிவித்தார். “புரோட்டோகால் அடிப்படையில், எனக்கு அடுத்தபடியாக இருந்த அதிகாரிக்கு குத்துவிளக்கேற்ற மெழுகுவர்த்தி வழங்கினேன்.

அதன்பிறகு எம்.எல்.ஏ.வுக்கும் வழங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அவர் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்” என்றும் கூறினார்.
மேலும், “பள்ளிக் கட்டிடத் திறப்பு விழாவின் போது, எம்.எல்.ஏ. பல்லவி தன்னிச்சையாக எனக்கு முன்பாகவே ரிப்பன் வெட்டி நிகழ்ச்சியை தொடங்கினார்” என்றும் மேயர் பிரியா விளக்கம் அளித்தார்.