வாக்காளர்களுக்கு போலி தங்க நாணயம் - உள்ளாட்சி தேர்தலில் ஏமாற்றிய வேட்பாளர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு போலி தங்க நாணயம் கொடுத்து வேட்பாளர் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 36வது வார்டில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
இந்த வார்டு காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர் மணிமேகலை துரைப்பாண்டி சுயேட்சையாக களம் கண்டார். இந்த வார்டில் மொத்தம் 3304 வாக்குகள் உள்ள நிலையில் 1950 வாக்குகள் பதிவாகின. இதனிடையே தேர்தல் வாக்குறுதியாக வாக்காளர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயங்களை மணிமேகலை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அதனைப் பெற்றுக் கொண்ட அப்பகுதி மக்கள் அதனை அடகு வைக்க சென்ற போது அவை அனைத்தும் போலியானது என்று தெரிய வந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் சர்ச்சைக்குள்ளான வேட்பாளர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
அதேசமயம் 36-வது வார்டுக்கு மறு தேர்தலை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.