இந்தியாவில் பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பூசி தயார் - யாரெல்லாம் தகுதியானவர்கள்?
இந்தியாவில் பெண்களுக்கான புற்றுநோய் தடுப்பூசி 6 மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய்
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர். புற்றுநோய் தற்போது வரை குணப்படுத்த முடியாத நோயாக உள்ளது.
புற்றுநோயை குணப்படுத்தும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்தாலும், அது தற்போது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
6 மாதத்தில் தடுப்பூசி
இந்நிலையில், இந்தியாவில் புற்றுநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களுக்கான தடுப்பூசி குறித்த ஆராய்ச்சி ஏறக்குறைய முடிந்துவிட்டது. இந்த தடுப்பூசி 5 முதல் 6 மாதங்களில் பயன்பாட்டு வரும்.
நோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக புற்றுநோய் கண்டறியும் ஆய்வகங்கள் நிறுவப்படும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மருத்துவமனைகள், டே கேர் மையங்களில் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் நடத்தப்படும்.
9 முதல் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த தடுப்பூசி போட தகுதியுடையவர்கள். இந்த தடுப்பூசி, மார்பக, வாய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களை தடுக்கும் வகையில் போடப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு சுங்க வரி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது" என தெரிவித்துள்ளார்.