இலங்கை மக்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்திய கனேடிய குடிமகன் கைது
இலங்கை மக்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்திய கனேடிய குடிமகன் கைது செய்யப்பட்டார். கனேடிய குடிமகன் ஒருவர் மீது 29 ஆவணங்களற்ற இலங்கையர்களை Turks and Caicos நாடு வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்த உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த மோகன், ரிச்சி என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீ கஜமுகம் செல்லையா (55) என்ற கனேடியர், சுய லாபத்துக்காக கரீபியன் பகுதி வழியாக ஆவணங்களற்ற புலம்பெயர்வோரை அமெரிக்காவுக்குள் கடத்த திட்டமிட்டதாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார்.
அவர் அந்த இலங்கையர்களிடம் 28,000 முதல் 65,000 கனேடிய டொலர்கள் வரை கட்டணம் கோரியதாக FBI குற்றம் சாட்டியுள்ளது. பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, செல்லையா தன் குற்றங்களை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்தது.
இலங்கையிலிருந்து, துபாய், துபாயிலிருந்து மாஸ்கோ, மாஸ்கோவிலிருந்து கியூபா, கியூபாவிலிருந்து ஹெய்தி, ஹெய்தியிலிருந்து Turks and Caicos தீவுகள், அங்கிருந்து பஹாமாஸ், அங்கிருந்து மியாமி என நீண்ட பயணத்திட்டத்துடன் புலம்பெயர்ந்தோர் படகு ஒன்றில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இறுதியாக அவர்களை கனடாவில் கொண்டு சேர்ப்பது செல்லையாவின் திட்டம் என பெடரல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
40 அடி நீளம் கொண்ட அந்த படகு, Turks and Caicos நாட்டு பொலிசாரிடம் சிக்கியபோது, அதில் 106 ஆண்கள், 17 பெண்கள், ஒரு 15 வயது பையன் மற்றும் ஒரு 7வயது சிறுமி ஆகிய Haiti நாட்டவர்களும், 29 இலங்கை நாட்டு ஆண்களுமிருந்துள்ளனர். ஓராண்டு அங்கு சிறைவாசம் அனுபவித்தபின்பு, 2020ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 17ஆம் திகதி செல்லையா அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இது போக, 2017க்கும் 2019க்கும் இடையில், ஆறு இலங்கையர்களை சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு கொண்டு வர திட்டமிட்டதாகவும் செல்லையா ஒப்புக்கொண்டார். செல்லையா சுய லாபத்துக்காக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக, அவர் மீது அட்டர்னி ஜெனரலான Nicholas L. McQuaid குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது, செல்லையா தன் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர் தீர்ப்புக்காக காத்திருக்கிறார், அவரது வழக்கில் தீர்ப்பு வழங்கும் திகதி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.