கனடாவில் துப்பாக்கிகள் வாங்க விற்க தடை: ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி அறிவிப்பு
அமெரிக்கப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 19 மாணவமாணவியர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, துப்பாக்கி விற்பனை தொடர்பில் கனடா முக்கிய சட்டம் ஒன்றக் கொண்டு வர உள்ளது.
நேற்று இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த சட்டம் அமுலுக்கு வரும்போது, கனடாவில் யாரும் கைத்துப்பாக்கிகளை வாங்கவோ, விற்கவோ, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றவோ அல்லது இறக்குமதி செய்யவோ முடியாத ஒரு நிலை உருவாகிவிடும் என்றார்.
இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்படுமானால், துப்பாக்கிகள் மீதான தடை இலையுதிர்காலத்தில் அமுலுக்கு வந்துவிடும்.
இதுபோக, ஏற்கனவே துப்பாக்கிகள் வைத்திருப்போர், குடும்பச் சண்டை அல்லது துப்பாக்கியைக் காட்டி மிரட்டுதல் போன்ற விடயங்களில் ஈடுபட்டால்கூட, அவர்களுடைய துப்பாக்கி உரிமம் ரத்து செய்யப்படவும் இந்த புதிய சட்டம் வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.