கொரோனா தடுப்பூசி மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

periodscycle covidvaccinaion
By Petchi Avudaiappan Sep 20, 2021 04:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. இதனை உலக நாடுகள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மாதவிடாய் சமயத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் என்றும், அந்த சமயத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.இதனால் மாதவிடாய் சமயத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம். அப்படிப் போட்டுக் கொண்டால் ஆபத்து என்றும் பல தகவல்கள் வெளியானதால் பெண்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இதனிடையே சமீபத்திய ஆய்வறிக்கைகள் கொரோனா தடுப்பூசிகள் மாதவிடாய் சுழற்சிகளிலும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாதவிடாய் சுழற்சி மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருக்கக்கூடும் என்றும், கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட 30,000 பெண்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு ஆளாகி உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசியால் மாதவிடாயில் தாமதம் அல்லது விரைவான மாதவிடாய் காலம், எதிர்பாராத இரத்தப்போக்கு போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. இத்தகைய மாற்றங்கள் கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுதான் என்பது இன்னும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்கள் இதுபோன்ற பக்கவிளைவுகள் தற்காலிகமானவை தான் என்றும், அடுத்தடுத்த மாதத்தில் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.