இப்படியெல்லாம் ஒரு பிரதமர் பேசலாமா.? வன்மையாகக் கண்டிக்கிறேன் - முக ஸ்டாலின்!!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின் உரை
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் "வள்ளலார் – 200” நிறைவு விழா தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வள்ளலாரின் இறைய அனுபவங்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் முக ஸ்டாலின், தற்போதைய காலகட்டத்திற்கு தேவையான மிக முக்கியமான வழிகாட்டி வள்ளலார் என குறிப்பிட்டு, இறையியல் என்பது தனிப்பட்ட உரிமை என்றும் ஆனால் அதனை ஒரு கூட்டம் அரசியலுக்கு பயன்படுத்திகிறது என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டு மக்கள் அரசியல் வேறு - ஆன்மிகம் வேறு என்பதை பகுத்தறிந்து பார்க்கும் பகுத்தறிவாளர்கள் தான் என சுட்டிக்காட்டி, தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கோயில்களைப் பற்றிப் பேசி இருக்கின்றார் என கூறி, பிரதமர் மத்தியபிரதேசம், அந்தமான், தெலங்கானா என எங்கு சென்றாலும் தமிழ்நாட்டைப் பற்றித் தான் பேசுகிறார் என்றும் பிரதமரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்றார்.
இதெல்லாம் தவறா..?
தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களை, அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது என்றும் கோவில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்ற பிரதமரின் குற்றச்சாட்டை தான் திட்டவட்டமாக மறுப்பதாக குறிப்பிட்ட முதல்வர் முக ஸ்டாலின், அவருக்கு தான் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
பொறுப்பு வாய்ந்த நாட்டின் பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? என்று வினவி ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்தில் போய் பேசுவது முறையா? தர்மமா? போன்ற கேள்விகளை முன்வைத்தார்.
இந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் 3500 கோடிக் ரூபாய்கும் அதிகமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு இது தவறா? என்றும் 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருப்பது தவறா என்று கேள்வி எழுப்பினார்.