பிரச்சார கூட்டங்களா? கொரோனா கூடாரங்களா? - கொரோனா விதிமுறைகள் மீறும் அரசியல் கட்சிகள்
தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களில் கொரோனா தடுப்பு விதிகளை மறந்து ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவதால் கொரோனா மீண்டும் அபாய நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னம் சொல்லப் போனால் பிரச்சார கூட்டங்களா? அல்லது கொரோனா கூடாரங்களா? என கூறும் வகையில்தான் தற்போதைய நிலை உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பத்தை விட அனல் பறக்கும் தீவிர பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு சென்றாலும் பலகட்சிகளின் பிரச்சார கூட்டங்களும் அவர்களை சுற்றி கொத்து, கொத்ததாக கூட்டம் இருப்பதையும் பார்க்க முடிகிறது.

இவ்வாறு தேர்தல் களத்தில் நாம் எல்லோரது கவனமும் இருக்க நாம் மறந்து விட்ட பொதுவான ஒரு எதிரியும் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி கொண்டிருப்பதை நாம் உணரவில்லை? ஆம் நம்மை 10 மாதங்கள் பாடாய்படுத்தி தற்போது மீண்டும் சோதனை செய்ய உருமாறி வரும் கொரோனா தொற்றுதான் அந்த பொதுவான எதிரி. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுமார் 8 மாதங்கள் வரை கொரோனாவால் மக்கள் பட்ட கஷ்டங்களை வார்த்தைகளால் கூற முடியாது.
குறிப்பாக சமானிய மக்களுக்கு கொரோனா கொடுத்த வலி என்றுமே மாறாது. ஆனால் நாம், கொரோனா தடுப்பு வழிமுறைகளை சுத்தமாக மறந்தது போனோம் எனபதுதான் பெரும் சோகம். இதன் விளைவுதான் தற்போது கொரோனா மீண்டும் தன் மற்றொரு ரூபத்தை காட்ட தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 500-க்குள் தான் இருந்தது. ஆனால் இன்று 1,000-ஐ கடந்து அடங்காமல் நிற்கிறது.
பொது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது போன்ற வழிமுறைகளை பலர் மறந்ததுதான் இந்த நிலைமைக்கு காரணம் என கூறுகின்றனர் மருத்துவர்கள் மக்களை திருத்தி விடலாம். ஆனால் இதனை மக்களிடம் எடுத்து சொல்லும் அரசியல்வாதிகளை யார் திருத்துவது? ஆமாம் .தற்போது மக்களை விட அதிகம் தப்பு செய்வது அரசியல்வாதிகள்தான்.
பொறுப்புடன் நடக்க வேண்டிய ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற வெறியில் கொரோனா தடுப்பு விதிகளை கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் தொடங்கி முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்யும்போது ஆயிரம், பல்லாயிரம் கணக்கில் பெருங்கூட்டம் கூடி விடுகிறது. இவ்வாறு மக்கள் கூடும்போது, மாஸ்க் அணிபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏன் சில இடங்களில் முக்கிய தலைவர்களே மாஸ்க் அணிவதில்லை.
தலைவன் எவ்வழியோ தொண்டனுன் அவ் வழிதான் தேர்தல் களத்தில் காற்றில் பறந்து போனது கொரோனா விதி முறைகள். ஒரு பக்கம் கொரோனவை கட்டுப்படுத்த தடுப்பூசியை செலுத்தும் பணி விரைவாக நடக்கின்றது. நல்ல விஷயம் தான் .ஆனால் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பிரச்சார கூட்டங்களை அரசியல்வாதிகள் நடத்தும்போது எதிர்கால நிலைமை மோசமாகும் என அஞ்சுகின்றனர் மருத்துவ நிபுணர்கள். ஆனால் இதையெல்லாம் நினைத்து அரசியல்வாதிகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
தமிழகத்தின் பிரதான கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், தேர்தல் சமயத்தில் கூட்டத்தைத் தவிர்க்க முடியாது. கூட்டத்தில் பலர் முகமூடி அணிய மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இது தேர்தல் காலம் என்பதால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது என சர்வசாதாரணமாக கூறினாராம்.

ஆகவே தற்போது திருந்த வேண்டியது முக்கியமாக பொது மக்களை அரசியல்வாதிகள்தான். கோடிக்கணக்கான மக்களின் நலன் கருதி பிரசார கூட்டங்களில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் உள்ளது.
இது பொறுப்பு மட்டுமல்ல; அவர்களின் கடமையும் கூட.
கடமையினை செய்வார்களா அரசியல் வாதிகள்? பொறுத்திருந்து பார்ப்போம்.