'கேம்லின்' நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்!
கேம்லின் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
கேம்லின் நிறுவனம்
இந்தியாவில் ஸ்டேஷனரி தயாரிப்பில் 'கேம்லின்' முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். 93 ஆண்டு பழமையான இந்நிறுவனம் 1946-ம் ஆண்டு தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு பங்குச்சந்தையில் பட்டியலிட்டு பொதுத்துறை நிறுவனமாக மாறியது.
மேலும், இந்நிறுவனம் 2011 முதல் ஜப்பானின் கோகுயோ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. கேம்லின் நிறுவனத்தின் சுமார் 51% பங்குகளை தற்போது கோகுயோ நிறுவனம் வைத்துள்ளது.
சுபாஷ் தண்டேகர்
இந்நிலையில் கேம்லின் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, தாதரில் உள்ள சிவாஜி பூங்கா மயானத்தில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்குகளில் குடும்பத்தினர், கேம்லின் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழில் துறை பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், சுபாஷ் தண்டேகரின் மறைவிற்கு மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் அஞ்சலி செலுத்தினார்.