உள்ளாட்சி தேர்தலுக்காக தயாராகிறாரா முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்!
ஆளும் கட்சி எதிராக ஆர்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உட்பட 3500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு தோல்வியை சந்தித்த அதிமுக சோர்வில் உள்ளதாக பலராலும் பேசப்பட்டு வந்தது.அரசியல் களத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள விமர்சகர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். அதிமுக ஆட்சியை பறிகொடுத்ததற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையேயான தலைமைப் பதவிக்கான மோதலும், இரட்டையர்களுக்குள் எழுந்துள்ள அதிகார மோதலை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதற்காக ஆடியோ ஆயுதத்தை கையில் எடுத்திருக்கும் வி.கே.சசிகலாவின் வீராப்பான போராட்டமும் முக்கிய காரணங்களாக முன்வைக்கப்பட்டன.
இப்படியான காரணங்களால் அதிமுக பலவீனமடைந்து விட்டது என்று கருதி, அதிமுக.விற்கு எதிராக குறிப்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரிலான திட்டங்களை அகற்றும் நடவடிக்கைகளில் ஆளும்கட்சியில் உள்ள ஒரு சிலர் தீவிரம் காட்ட தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தை கலைத்துவிட்டு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்படும் என்று அறிவித்தார். அவரின் அறிவிப்பு அதிமுக.விற்குள் சலசலப்பு ஏற்படுத்திய நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், திமுக அரசின் அறிவிப்பையே தனது அரசியல் எழுச்சிக்கான வியூகமாக வகுத்துக் கொண்டார்.
தனது தொண்டர்களை ஒன்று திரட்டி பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தை முன் எடுத்திருந்தார். சி.வி.சண்முகத்தின் போர்ப்படை தளபதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே, வெறித்தனமாக உழைக்க தொடங்கியிருக்கிறார்கள் விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் அவரது விசுவாசிகள்.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தை அரசியல் போராட்டமாக மாற்றி, விழுப்புரத்தில் எழுச்சி மிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தி காட்டியிருக்கிறார் சி.வி.சண்முகம். ஆளும்கட்சியாக அரியணையில் உள்ள திமுக அரசு 100 வது நாளை வெற்றி விழாவாக கொண்டாடுவதற்கு முன்பாகவே, தமிழகத்தில் ஆளும்கட்சிக்கு எதிரான முதல் ஆர்ப்பாட்டத்தை நடத்தி மாஸ் காட்டியிருக்கிறார்.

அவருக்கு துணையாக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுருவும் தன்பங்கிற்கு அந்த மாவட்டத்தில் இருந்து அதிகமான ஆட்களை அழைத்து வந்திருந்தார். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி 3500 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. உண்மையில் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்ட எழுச்சி, தமிழகமெங்கும் உள்ள அதிமுக.வினரை வீறுகொண்டு எழ வைத்திருக்கிறது. என்றுதான் சொல்ல வேண்டும்.
சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியை எதிர்த்து போராடி வெற்றி பெற்றுவிட விட முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் உணர்வோடு அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கண்க்கில் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் தைரியத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.

விழுப்புரம் அதிமுக ஆர்ப்பாட்டத்தின் வெற்றி, முழுக்க, முழுக்க சி.வி.சண்முகத்தின் உழைப்புக்கு கிடைத்தது என அக்கட்சி நிர்வாகிகளிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக அரசு, ஆட்சி நிர்வாகத்தில் முழு கவனத்தையும் செலுத்தி, பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு நிர்வாகத்தை நடத்தினால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெருமை வந்து சேரும். அதைத் தவிர்த்து உள்ளூர் அரசியலில் தலையிட்டு குளிர்காய நினைத்தால், விழுப்புரம் ஆர்ப்பாட்டம் போல, எல்லா மாவட்டங்களிலும் அதிமுக.வினரின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதற்கு முதல் நபராக பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் சி.வி.சண்முகம்.
அவரின் வழியில் மற்ற அதிமுக தலைவர்களும் முண்டாசு கட்ட துவங்கி விடுவார்கள் என்பதை ஆளும்கட்சி புரிந்து கொண்டால் நல்லது என்று உற்சாகமாகவே பேசினார். விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக.வினர் உற்சாகமாக வலம் வரும் இன்றைய தினத்தில், திமுக நிர்வாகிகளிடமும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அதிருப்தி மனநிலைதான் ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா ஆர்ப்பாட்டத்தில் உற்சாகமாக பேசிய சி.வி.சண்முகம், அரசியல் சாதூர்யத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயலலிதா பெயர் வேண்டாம் என்றால் அம்பேத்கர் பெயரை சூட்டுங்கள் என்று திமுக அரசை வேண்டும் என்றே வம்புக்கு இழுத்திருக்கிறார். இதெல்லாம் அமைச்சர் பொன்முடிக்கு தேவையா என்பதுதான் எங்கள் கேள்வி என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள்.
ஆக மொத்தத்தில் ஆர்ப்பாட்டம் மூலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் நெருப்பை பற்ற வைத்திருக்கிறார் சி.வி.சண்முகம்.