போலீசாருக்கு சிக்கன்.. மட்டன்.. என தடபுடலாக விருந்து கொடுத்த டி.ஜி.பி.சைலேந்திரபாபு..!
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி நேற்றோடு முடிவடைந்தது.
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டனர். போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடந்து வந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் நடைபெற்றது.
நிறைவு விழா
மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேற்று முன்தினம் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நிறைவு பெற்றது.
ரூ.1 கோடி பரிசுத் தொகை
நேற்று 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி’ வீரர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 1 கோடிக்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
காவலர்களுக்கு டிஜிபி பிரியாணி விருந்து
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்ட காவலர்களை பாராட்டி, அவர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வழங்கியுள்ளார்.
பிரியாணி விருந்து கொடுத்து, காவலர்களுடன் அவர் அமர்ந்து சாப்பிட்டார் . இதனையடுத்து, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவலர்களுக்கும் 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.