கைதானவர்களை இரவில் விசாரணை நடத்தக்கூடாது - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கெல்லிஸ் சிக்னல் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுப்பட்டிருந்தபோது, கத்தி மற்றும் கஞ்சாவுடன் சிக்கிய விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டத்தை தொடர்ந்து இருவரையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டது. அப்போது விசாரணையின்போது விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து எழும்பூர் பெருநகர குற்றவியல் 2-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் யஸ்வந்த் ராவ், தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் மற்றும் அயனாவரம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், வழக்கில் கைதானவர்களை இரவில் விசாரணை நடத்தக்கூடாது என்றும், மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.