துணை ஜனாதிபதி தேர்தல் - தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி
தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன்ம் இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தல்
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதத்தில் தனதுபதவியை ராஜினாமா செய்தார்.
இதனை தொடர்ந்து குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில், ராஜ்யசபாவை சேர்ந்த 239 எம்.பிக்கள் மற்றும் லோக்சபாவை சேர்ந்த 542 எம்.பிக்கள் உட்பட 781 பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள்.
7 எம்.பிக்களை கொண்ட நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் 4 எம்.பிக்களை கொண்ட சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி யாருக்கும் ஆதரவு தராமல் தேர்தலை புறக்கணித்தது.
பிரதமர் மோடி முதலாவதாக தனது வாக்கை செலுத்தினார். மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குபதிவில், மொத்தமுள்ள 782 வாக்குகளில் 770 வாக்குகள் பதிவாகியுள்ளன. 12 பேர் வாக்களிக்கவில்லை.
சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணி சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளும் பெற்றனர்.
152 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி, இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றியை பாஜகவினர் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.