அண்ணா சிலை அவமதிப்பு - ஆ.ராசாவின் உருவப்படத்திற்கு செம்புள்ளி, கரும்புள்ளி
விழுப்புரம் மாவட்டம் அருகே அண்ணா சிலைக்கு செருப்பு மாலை மர்ம நபர்கள் அணிவித்து அவமதிப்பு செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணா சிலை அவமதிப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா சிலை அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, ஆ.ராசாவின் உருவப்படத்தை செம்புள்ளி கரும்புள்ளி வைத்து அண்ணா சிலை மீது மாட்டிவிட்டு, திமுக கட்சி கொடியை அண்ணா சிலை முகத்தில் மூடிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை அவ்வழியாக வந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அண்ணா சிலை மீது இருந்த செருப்பு மாலையையும், ஆ.ராசாவின் புகைப்படத்தினையும் அகற்றினர்.
மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
அண்ணாசிலைக்கு செருப்பு மாலை அணிவித்தற்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் இது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.