நகராட்சி, பேரூராட்சிகளில் பைபாஸ் சாலைகள் அமைக்கப்படும் : அமைச்சர் எ.வ.வேலு
தமிழகத்தின் அனைத்து நகராட்சிகளிலும் பேரூராட்சிகளிலும் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ஆய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் சக்கரபாணி, மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆட்சியர்கள், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்திலுள்ள அனைத்து நகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் மக்கள் நெரிசலைக் கட்டுப்படுத்த புறவழிச்சாலைகள் அமைக்கப்படும் என்றும், மதுரையில் புதிதாக 3 மேம்பாலங்கள் கட்ட வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் ஒப்புதலோடு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்து திட்டங்களையும் தமிழக முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார். 5 ஆண்டு காலம் ஆட்சிப் புரிய மக்கள் எங்களைத் தேர்ந்து எடுத்துள்ளார்கள். தமிழகத்தின் நிதிநிலையைப் பொறுத்து, பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
நிதிநிலைக் குறித்து கண்டிப்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். நெடுஞ்சாலைத்துறையைப் பொறுத்த வரை சிங்கிள் டெண்டர் சிஸ்டம் ஒழிக்கப்படும் என்றும், கீழ் நிலை வரை அனைத்துப் பணிகளும் முறையாக டெண்டர் விடப்பட்டு, பலரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டு, வெளிப்படைத் தன்மையோடு பணிகள் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.