‘கிரிக்கெட் வேண்டாம்... குடும்பமே முக்கியம்’ - திடீரென விலகும் பிரபல வீரர்
குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதால் இந்தியாவுடனான டெஸ்ட் மற்றும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லருக்கு விரைவில் 2வது குழந்தை பிறக்க உள்ளது. இதனால் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் விலகியுள்ளார்.
இதனைக் காரணமாக கொண்டு இந்திய அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ஆஷஸ் தொடரிலும் விலகும் யோசனையில் இருப்பதாக பட்லர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், எனது குடும்பம் ரொம்பவே முக்கியமானது. என் கிரிக்கெட் வாழ்விற்காக மனைவியும், குடும்பத்தினரும் நிறைய இழந்துள்ளார்கள். நானும் கிரிக்கெட்டுக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறேன். அதனால் இந்த நேரத்தில் அவர்களுடன் இருக்க விரும்புவதாக ஜோஸ் பட்லர் கூறியுள்ளார்.
இதனைத் தவிர்த்து சமீப காலமாக விளையாட்டு உலகைச் சேர்ந்தவர்கள் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருவதும், போட்டிகளில் இருந்து விலகுவதும் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.