விஜய்யை பேர் சொல்லக் கூடாது; அப்படிதான் அழைக்கனும் - பெண் நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை!
பெண் நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை கூறியுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கம்
விஜய் அரசியல் கால் பாதிக்க உள்ளார் என்று அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அண்மையில் கல்வி விழா நடத்தியது மட்டுமின்றி அதில் அரசியலும் பேசி, தனது அரசியல் வருகைக்கு விஜய் வலு சேர்த்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு பாட சாலை தொடங்கப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளன்று அவர் சிலைக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், வழக்கறிஞர் அணியை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சமூக ஊடக பிரிவு ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று சென்னை, பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
புஸ்ஸி ஆனந்த்
இந்த கூட்டத்தில் மைக்கில் பேசிய பெண் நிர்வாகி ஒருவர் "நாங்கள் ஆசைப்படுவது ஒன்றே ஒன்றுதான். விஜய்யை நாங்கள் நேரில் சந்திக்க விரும்புகிறோம். அவர் உங்களுக்கு வேண்டுமானால் தலைவர் இருக்கலாம். எங்களுக்கு அவர் என்றைக்குமே உடன்பிறவா சகோதரர்தான்.
நான் சிறுவயதில் இருந்தே விஜய் ரசிகை" என்று பேசினார். அப்போது இடைமறித்த புஸ்ஸி ஆனந்த், ‘தலைவனின் பெயரை எப்போதுமே சொல்லக் கூடாது. ‘தளபதி’ என்றுதான் சொல்லவேண்டும்” என்று அறிவுரை கூறியுள்ளார். இதனை இணையவாசிகள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.