பேருந்து நிலையங்களில் அதிக விலைக்கு விற்கப்படும் உணவு - கதறும் பொதுமக்கள்
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்து நிலையங்களில் விற்கப்படும் உணவின் விலை சாதரணமான கடைகளில் விட அதிகளவு விற்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.
நாம் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் பேருந்து, ரயில் அல்லது விமானம், தேவைப்பட்டால் சில இடங்களுக்கு கப்பலில் தான் பயணம் செய்வோம். அப்படி அவசர அவசரமாக ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளில் சாப்பிடுவதில்லை. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் சாப்பிட்டுவிட்டுதான் பயணம் மேற்கொள்கிறார்கள்.
இந்த நிலையில் சாதாரண கடைகளை விட பேருந்து, ரயில் நிலையங்களில் உள்ள கடைகளில் சாப்பாட்டின் விலை இரண்டு மடங்காக அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாகவும், சாப்பாட்டின் தரமும் அவ்வளவு நன்றாக இல்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பேருந்து நிற்கும் இடங்களில் உள்ள கடைகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர். சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாகவே பணம் எடுத்து செல்வர். இடையில் நிறுத்தப்படும் கடைகளில் அதிகளவு வசூலிக்கப்படுவதால், சிலர் அவர்களின் பயணம் முடியும்வரை சாப்பிடாமல் இருக்கின்றனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கடைகள் சுத்தம், சுகாதாரம் இன்றி காணப்படுவதாக கூறுகின்றனர். மேலும், அங்கு விற்கப்படும் உணவுகள் சராசரி விலையை விட 3 மடங்கு அதிகரித்து விற்கபடுவதாகவும் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அவசரத்திற்கு சாப்பிடுவதால் யாரும் கேள்வி கேட்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த நிலையை எதிர்த்து பலரும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலை எப்போது மாறும்... பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்..