பேருந்துநிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து!
பழனி பேருந்துநிலையத்தில் எதிர்பாராத விதமாக மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக வெளியூர் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலும், நகரப் பேருந்துகள் பழைய பேருந்துநிலையத்திலும் நிற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
50ஆண்டுகளுக்கு மேலான பழைய பேருந்துநிலையத்தில் பல்வேறு இடங்களில் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் இன்று பேருந்து நிலையத்தின் ஒருபகுதியில் உள்ள கடைகளின் மேற்கூரை திடீரென இடிந்துவிழுந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. பெரிய
விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக சேதமடைந்துள்ள பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.