கணவனை கொலை செய்து காரில் தீவைத்து எரித்த குடும்பம் - அதிர்ச்சியில் போலீசார்
கர்நாடக வனப்பகுதியில் காரில் ஆண் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் அவரது மனைவி, குழந்தைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சாகர் பகுதியைச் சேர்ந்த மூலிகைப்பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வரும் தொழிலதிபர் வினோத் என்பவருக்கு வினுதா என்ற மனைவியும், விவேக், வினோத் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தீர்த்தஹள்ளி வனப்பகுதியில் கார் ஒன்று பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதில் வினோத் சடலமாக கிடந்துள்ளார். முதலில் இந்த சம்பவத்தில் காரின் பதிவு எண் தவறாக இருந்ததால் உயிரிழந்த நபர் யார் என்பது தெரியாமல் இருந்தது. ஓரிஜினல் நம்பர் பிளேட் கழற்றப்பட்ட போலி பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட் அதில் பொருத்தப்பட்டிருந்தது.
காரின் சேஸ் நம்பரை கொண்டு அதன் உரிமையாளர் வினோத் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதேசமயம் வினோத் காணாமல் போனதாக அவரது குடும்பத்தில் இருந்து யாரும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்காததால் போலீசார் சந்தேகமடைந்தனர். இதுகுறித்து அவரது மனைவி மற்றும் மகன்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
தொழில் சம்பந்தமாக கடலோர பகுதிக்கு செல்வதாக அவர் கூறிவிட்டு சென்றதாக மனைவி வினுதா கூற, அவரது மகன்கள் வேறுவிதமாக கூறியுள்ளனர். இதனால் அவர்களிடம் திவீரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கணவனை குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்ததை வினுதா ஒப்புக்கொண்டார்.
வினோத்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் தவறான பழக்கம் இருந்தது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. அந்தப்பெண் சொத்தை அபகரித்து விடுவார் என்ற அச்சத்தில் இருந்த அவரது மனைவி, மகன்கள், வினோத்தின் தம்பி மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து செப்டம்பர் 26 ஆம் தேதி பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்துள்ளனர். வீட்டில் வைத்து வினோத்தை அடித்துக்கொலை செய்துள்ளனர்.
வீட்டில் படிந்த ரத்தக்கறையை கெமிக்கல் ஊற்றி அகற்றிவிட்டு ரத்தம் படிந்த ஆடைகள் மற்றும் செருப்புகளை எரித்துள்ளனர். இரண்டு நாள்கள் கழித்து வினோத்தின் உடலை காரில் கட்டிவைத்து இரவு 10.30 மணிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். உள்ளூர் கடைக்காரர் மூலம் காரின் நம்பர் பிளேட்டை மாற்றியுள்ளனர்.
காரில் வினோத்தின் சடலத்தை கொண்டு செல்லும்போது மொபைல் போனை அனைவரும் சுவிட்ச் ஆஃப் செய்துள்ளனர். மீண்டும் வீட்டிற்கு வந்ததும் போனை மீண்டும் ஆன் செய்துள்ளனர். வினோத்தின் மொபைல்போனை தண்ணீரில் தூக்கி வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு திரும்பியுள்ளனர் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.