சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம் : ஏன் தெரியுமா?

covid chennai people bus Chengalpattu
By Jon Apr 09, 2021 10:27 AM GMT
Report

சென்னையில் நாளை முதல் மக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தற்பொழுது தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தமிழக அரசு தற்போது கூடுதலாக சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. குறிப்பாக, உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில், பொதுவாக 44 இருக்கை வசதியும், 25 பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், தற்பொழுது தமிழக அரசால் பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்திட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சிரமமின்றி பயணம் செய்திட ஏதுவாக, நாளை (10.04.2021) சனிக்கிழமை முதல், 300 முதல் 400 பேருந்தகள் வரையில் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கம் : ஏன் தெரியுமா? | Buses Chennai Tomorrow People

குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் பயணம் செய்கின்ற, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளையில் கூட்டநெரிசலை குறைக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளையும் முகக்கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக,அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.