சர்ச்சையில் சிக்கிய திமுக அமைச்சர்... நடக்காத வேலைக்கு கல்வெட்டு வைத்த அதிகாரிகள்...
திண்டுக்கலில் நடக்காத வேலைக்கு கல்வெட்டு வைக்கப்பட்டதால் திமுக அமைச்சர் சக்கரபாணி சர்ச்சையில் சிக்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தின் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சிறுநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இது மக்களின் உயிருக்கு அச்சமளிக்கும் வகையில் இருந்ததால் அதனை சீரமைக்க வேண்டும் என அந்த அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்களில் ஒருவரான உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட சிறுநாயக்கன்பட்டி மக்கள் உற்சாகமடைந்தனர்.
ஆனால் பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக பணிகள் மேற்கொள்ளப்படாததால் இதுகுறித்து அப்பகுதி மக்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சீரமைக்கப்படாத பேருந்து நிறுத்தத்தில் அமைச்சர் சக்கரபாணியின் பரிந்துரையின் பேரில் சீரமைக்கப்பட்டதாக புத்தம் புதிய கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர். மேலும் பணிகள் மேற்கொள்ளாமலேயே திமுகவினரும், அதிகாரிகளும் பணத்தை சுருட்டி விட்டதாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த புகைப்படங்களும் செய்திகளும் ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் வெளியாகி பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் திடீரென பேருந்து நிறுத்தம் சீரமைக்கப்பட்டுள்ளதோடு அந்த புகைப்படங்களையும் திமுகவினர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.