பெற்ற தாயை பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு ஓடிச் சென்ற மகன்... - கதறிய தாயை அரவணைத்த ‘அறம் சிகரம்’ அமைப்பினர்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில், கோவிலுக்கு கூட்டிச் செல்வதாக கூறி என் மகன் என்னை இங்கே விட்டுவிட்டு சென்று விட்டானே என்று மூதாட்டி ஒருவர் கதறி அழுதுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்தவர்கள் அந்த மூதாட்டியிடம் விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில், அந்த மூதாட்டி பெயர் காமாட்சி. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னோரி, அடுத்த திருவள்ளுவாயில் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு எனக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். 5 பேருக்கு திருமணமாகிவிட்டது. காமாட்சி இளைய மகன் ஆறுமுகத்துடன் வசித்து வந்துள்ளார்.
பெற்ற தாயை கவனிக்க முடியாத ஆறுமுகம் கோவிலுக்கு கூட்டிகிட்டு செல்வதாகக் கூறி அவரை கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு ஓடி சென்றுவிட்டார்.
சென்ற மகன் நீண்டநேரமாகியும் வராததால், மூதாட்டி பரிதவித்துள்ளார். அய்யோ... என்னை விட்டுவிட்டு சென்றுவிட்டானே... எனக்கு யாருமே இல்லையே... 5 பிள்ளைகளை பெற்ற வயிறு... என் தவிக்கவிட்டுவிட்டு சென்றுவிட்டானே என்று மூதாட்டி கதறி அழுதுள்ளார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
மேலும், அங்கிருந்தவர்கள் அந்த மூதாட்டிக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றினர். இந்நிலையில், நேற்று மகனால் தெருவில் கைவிடப்பட்ட தாயை ‘அறம் சிகரம்’ தொண்டு நிறுவனத்தினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். பேருந்து நிலையத்தில் அழுது கொண்டிருந்த மூதாட்டிக்கு, ஆறுதல் கூறிய தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத், அவருக்கு உதவி செய்துள்ளார்.