பேருந்து பயணியை சரமாரியாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர் - கொந்தளித்த சக பயணிகள்
பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கவில்லை என கூறி பயணி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் சட்டையை கிழித்து தாக்கிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை
சென்னை மறைமலைநகரை சேர்ந்தவர் தினேஷ் (22) அடையாறில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் தினேஷ் கிண்டியில் இருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் மாநகர பேருந்தில் (தடம் எண் 78) பயணம் செய்துள்ளார்.
பின்னர் பேருந்து சின்னமலை பேருந்து நிலையம் அருகே வந்த போது டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டனர்.
பயணியை சரமாரியாக தாக்கிய டிக்கெட் பரிசோதகர்
அப்போது தினேஷிடம் டிக்கெட் குறித்து கேட்ட போது அதற்கு தான் முந்தைய பேருந்து நிறுத்தத்தில் ஏறியதாகவும், பேருந்தில் அதிகப்படியான கூட்ட நெரிசல் இருந்ததால் இடையில் நின்று இருந்த பயணிகளிடம் பணத்தை கொடுத்து டிக்கெட் எடுக்க கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை சற்றும் காதில் வாங்காத டிக்கெட் பரிசோதகர் தினேஷை இழுத்து பேருந்தை விட்டு கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார்.
மேலும் சக பயணிகள் கூறியும் கேட்காத பரிசோதகர் தினேஷை தகாத வார்த்தையால் பேசி செல்போன் மற்றும் உடைமைகளை பறித்துள்ளார்.
இதையடுத்து சக பயணிகள் பரிசோதகரை தடுத்து நிறுத்தி தினேஷை விடுவித்தனர். டிக்கெட் பரிசோதகர் தினேஷை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நடவடிக்கை பாயுமா?
டிக்கெட் எடுக்க தவறினால் அதற்குண்டான அபராதத்தை வசூலிக்க வேண்டுமே தவிர பயணிகள் மீது தாக்குதல் நடத்துவது தவறு என பலர் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட தினேஷ், தன்னை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அது மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் தாக்கிய சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.