திருமணமாகாத ஏக்கத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர் தற்கொலை
சத்தியமங்கலம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் வாரச்சந்தை வளாகத்தில் இன்று 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த உடல் அருகே விஷபாட்டில் இருந்ததை கண்டனர். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்ன கள்ளிப்பட்டியை சேர்ந்த ரமணி என்பது தெரிய வந்தது.
இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேட்டுப்பாளையம் கிளையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த ஓட்டுநர் ரமணி மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகியதும், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.