சொகுசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவும், மதுபாட்டில்களும்..! போலீசில் சிக்கிய கில்லாடி ஓட்டுநர்..!
விழுப்புரம் அருகே மர்மகும்பல் துணிச்சலாக சொகுசு பேருந்தில் கஞ்சா , மதுபாட்டில்கள் கடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள ஞானோதயம் சோதனைச் சாவடியில் வளத்தி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செஞ்சி நோக்கி சொகுசு பேருந்து ஒன்று அதிவேகமாக வந்தது. அதனை போலீசார் மடக்க முயன்ற போது பேருந்தை நிறுத்தாமல் அந்த மர்மகும்பல் வேகமாக சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து பேருந்தை துரத்திய போலீசார் கூடுவாம்பூண்டி என்ற இடத்தில் பேருந்தை மடக்கி பிடித்தனர். மேலும் பேருந்திலிருந்து தப்பி ஓட முயற்சி செய்த ஓட்டுநர் நடராஜ் என்பவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதனை தொடர்ந்து பேருந்தை சோதனை செய்து பார்த்ததில் லக்கேஸ் வைக்கும் இடத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட கஞ்சா பார்சல் மூட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதே இடத்தில் மதுபாட்டில்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நடராஜ் பீகாரில் இருந்து, கஞ்சாவும் மதுபாட்டில்களையும் கடத்திவருவதாக தெரிவித்துள்ளார். மேலும், இதை மதுரையில் கொண்டு சென்று டெலிவரி செய்யவுள்ளதாகவும் தெரியவந்தது.