நொடிப்பொழுதில் தண்ணீரில் மூழ்கிய பேருந்து! 2 பேரின் உயிரை காப்பாற்றிய வீரப்பெண்- குவியும் பாராட்டுகள்
மத்தியபிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது. நேற்று சிதி பகுதியில் இருந்து சத்னா நகரை நோக்கி சுமார் 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பட்னா கிராமத்தின் அருகே பேருந்து சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பெரிய கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது, 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டாலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த விபத்தில் மிக துரிதமாக செயல்பட்டு இருவரின் உயிரை காப்பாற்றியுள்ளார் Shivrani Lonia என்ற பெண். பேருந்து கால்வாய்க்குள் விழுந்ததும் சற்றும் யோசிக்காமல், தன்னுடைய தம்பியின் உதவியுடன் இருவரை காப்பாற்றியுள்ளார். இவர் மட்டுமின்றி இவரது குடும்பத்தை சேர்ந்தவர்களும் இணைந்து மொத்தம் 7 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் 16 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Shivrani -ன் துணிச்சலை பாராட்டியுள்ள மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமார் சௌத்ரி, உன்னுடைய தைரியத்துக்கு தலைவணங்குகிறேன், தன் உயிரையும் பொருட்படுத்தாது ஆபத்தில் இருந்தவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறார், இந்த மாநிலமே உன்னால் பெருமையடைகிறது என தெரிவித்துள்ளார்.