மூணாறில் வேன் கவிழ்ந்து விபத்து- 4 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு லட்சுமி எஸ்டேட்டிற்கு திருமணத்திற்காக சென்ற மினி வேன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
20 பேர் படுகாயத்துடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாலை விபத்து
கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் போடிமெட்டு பகுதியை அடுத்து கொச்சி தனுஸ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தோண்டிமலை வளைவில் திரும்பும்போது திருநெல்வேலியில் இருந்து மூணாறு லட்சுமி எஸ்டேட்டுக்கு திருமணத்திற்காக வந்த பெண் வீட்டார்களின் வேன் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் 8 வயது சுசீந்திரன் , 65 வயது வள்ளியம்மாள் , 60 வயது பெருமாள் , 20 வயது சுதா ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். இதில் மூன்று பேர்கள் சம்பவ இடத்திலும், ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் உடலை கொண்டுவரும் வழியிலும் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் படுகாயம் அடைந்த 20 நபர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டும் பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் 17 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண விசேஷத்திற்காக சென்றவர்கள் விபத்தில் சிக்கியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.