திருமண கோஷ்டியினர் கூட்டத்துக்குள் புகுந்த பஸ் -8 பேர் பலியான பரிதாபம்
பாகிஸ்தானில் திருமண கோஷ்டியினர் கூட்டத்துக்குள் பஸ் புகுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப் மாகாணத்தில் மண்டி பஹாவுதீன் நகரில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இதையொட்டி மணமக்களின் உறவுக்காரர்கள் திருமண மண்டபத்துக்கு செல்வதற்கு வாடகைக்கு வேன் ஏற்பாடு செய்தனர். வெவ்வேறு பகுதியில் இருந்து வந்த உறவுக்காரர்கள் வேனில் ஏறுவதற்காக நகரின் முக்கிய சாலைக்கு வந்து காத்திருந்தனர்.
அப்போது சாலையில் வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடுமையான பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த சாலையில் பஸ் ஒன்று அதிவேகத்தில் வந்தது. தறுமாறாக ஓடிய அந்த பஸ் சற்றும் எதிர்பாராத வகையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த திருமண கோஷ்டியினரின் கூட்டத்துக்குள் புகுந்தது.
இதில் பலர் சாலையில் தூக்கி வீசப்பட்டதுடன் 5 பேர் சம்பவ இடத்திலேயும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 பேரும் பலியாகினர். மேலும் காயமடைந்தவர்களின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.