போகி பண்டிகையன்று நெகிழி, டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னையில் போகி பண்டிகையையொட்டி நெகிழி, டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
போகி பண்டிகை 'பழையன கழித்து, புதியன புகுதலும்' என்று காலம்காலமாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த நாளில் பழையவற்றையும், தேவை இல்லாததையும் தூக்கி எறிவது மக்களின் வழக்கம். இந்த நாளில் தேவையில்லாத பழைய டயர், பிளாஸ்டிக் பொருட்களையும் மக்கள் சேர்த்து எரித்து வருகின்றனர்.
அந்த வகையில் போகிப்பண்டிகை நாளை(ஜனவரி 13 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போகியன்று விதிமுறைகளை மீறி டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் எரிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி அவ்வாறு எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெகிழி பொருட்கள் எரிக்கப்படுகிறதா என அனைத்து மண்டலங்களிலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் சென்னை மாநகராட்சி சார்பாக இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக தொடர்ந்து இந்த அறிவிப்பு இருக்கும். ஆனால் இந்த முறை அபராதத்துடன் எச்சரிக்கை கொடுக்கக்கூடிய வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.