உயிரிழந்ததாக நினைத்து புதைக்கப்பட்ட பெண் - மூச்சுபயிற்சி மூலம் வெளியே வந்த அதிசயம்
மண்ணுக்கடியில் புதைக்கப்பட்ட பெண் மூச்சு பயிற்சி மூலம் உயிர் தப்பியுள்ளார்.
யோகா ஆசிரியை
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிந்து என்ற பெண்ணுக்கு கணவர் சந்தோஷ் குமார், யோகா ஆசிரியை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்துள்ளார்.
இதனையடுத்து பெங்களூருவில் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் தனது நண்பரான சதீஷ் ரெட்டி என்பவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை
இதன்பின் சதீஷ் ரெட்டி, யோகா ஆசிரியையை சந்தித்து யோகா கற்றுக்கொள்வதாகக் கூறி நட்பை வளர்த்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று, திபுரஹல்லி பகுதியில் வசிக்கும் யோகா ஆசிரியை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு அழைத்து செல்வதாக கூறி தனது காரில் வெளியே அழைத்து சென்றுள்ளார்.
செல்லும் வழியில் சதீஷ் ரெட்டியின் 3 நண்பர்கள் காரில் ஏறிக்கொண்டனர். கார் தனமிட்டெனஹள்ளியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றதும் யோகா ஆசிரியையின் ஆடைகளை உருவி பாலியல் தொல்லை அளித்துள்ளனர். அதன் பின் சதீஷ் ரெட்டி சார்ஜ்ர் வயர் மூலம் யோகா ஆசிரியையின் கழுத்தை நெரித்துள்ளார்.
தப்பி பிழைத்த ஆசிரியை
அப்போது தனது யோகா கலை மூலம் மூச்சை இழுத்து நிறுத்திகொண்டு மயங்கியது போல் நடித்து கீழே விழுந்துள்ளார். யோகா ஆசிரியை இறந்து விட்டதாக நினைத்த கும்பல், அங்கே அவசர அவசரமாக சிறிய குழி தோண்டிப் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
மூச்சை கட்டுப்படுத்தி இருந்த யோகா ஆசிரியை குழிக்குள் இருந்து வெளியேறி உயிர் தப்பினார். அதன்பின் அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உதவி கேட்டு ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து காவல்நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து விளக்கி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிந்து, சதீஷ்ரெட்டி உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.