பும்ராவை வம்பிழுத்த தென்னாப்பிரிக்க வீரர்கள் - இன்னைக்கு இருக்கு உங்களுக்கு கச்சேரி
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் இந்திய அணியினரிடம் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கடந்த ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 240 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து 2வது இன்னிங்ஸை விளையாட தொடங்கிய அந்த அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டீன் எல்கர் 46 ரன்களுடனும், டேர்டூசன் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ள நிலையில் 2 நாள் ஆட்டம் மீதமிருக்க தென்னாப்பிரிக்கா அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்திய அணியின் 2வது இன்னிங்ஸின் போது போட்டியில் வெற்றி பெற தென்னாப்பிரிக்க சில யுத்திகளை பயன்படுத்தினர். குறிப்பாக ஷாட் பால்களை வீசுவது, அதனை அடிக்க முடியவில்லை என்றால் வீரர்களை வெறுப்பேற்றுவது போன்ற செயல்களில் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஈடுபட்டனர்.
ரிஷப் பண்டையும் இப்படி தான் ஷாட் பந்துகளை வீசி டக் அவுட்டாக்கினர். இதே போன்று பும்ரா பேட்டிங் செய்ய வந்த போது, அவருக்கும் ஷாட் பால் வீசப்பட்டது. பும்ராவுக்கு காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பந்துகளை தென்னாப்பிரிக்க வீரர்கள் வீசினர். இதனால் பும்ரா கடுப்பாகி சிக்சர் விளாசினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் வீரருமான மார்கோ ஜென்சன், பும்ராவிடம் சண்டைக்கு வா என்பது போல் பேசினார். பும்ராவும் அதற்கு வாயாலே பதிலடி தந்தார். உடனே நடுவர்கள் இருவரையும் சமதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
பும்ரா 7 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் தென்னாப்பிரிக்க வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் கடும் கோபத்தில் உள்ள பும்ரா, பந்துவீச்சில் இன்று தக்க பதிலடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது,