ஓவைசி சென்ற கார் மீது மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு : ஒருவர் கைது
அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தே ஹாதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் மற்றும் ஐதராபாத் தொகுதி எம்.பி.யான ஒவைசி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் 10 ஆம் தேதி தொடங்கி பல கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது.
இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சிக்கு வர பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி உள்ளது. இது தவிரப் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ள நிலையில் இஸ்லாமிய வாக்குகள் கணிசமாக உள்ளதால் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
மொத்தம் 403 இடங்களைக் கொண்ட சட்டசபைத் தேர்தலில் 100 இடங்களில் மஜ்லிஸ் கட்சி போட்டியிடுகிறது.இதற்காக அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி நேற்று உத்தரப்பிரதேசத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்படி மீரட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பின்னர் ஓவைசி தனது காரில் டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாஜர்சி சுங்கச்சாவடி அருகே கார் சென்றுகொண்டிருந்த போது, அவரின் வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் சுட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் துப்பாக்கியை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர். இதனிடையே இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.