சொந்த பணத்தில் நினைவுச் சின்னம் கட்டுங்கள் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா? - விஜயகாந்த் கண்டனம்

Vijayakanth DMK
By Irumporai Jul 24, 2022 12:11 PM GMT
Report

மக்கள் வரிப்பணத்தில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைப்பது அவசியமற்றது என்றும், மாறாக அந்தப்பணத்தை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று தேமுதி தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு ₹80 கோடியில் பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னத்தை தமிழக அரசு அமைக்க உள்ளது.

விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, அயல்நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது, வேலை வாய்ப்பின்மை, கொரோனா பரவல் காரணமாக வருமானம் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

சொந்த பணத்தில் நினைவுச் சின்னம் கட்டுங்கள் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா?  - விஜயகாந்த் கண்டனம் | Build A Monument With Your Own Vijayakanth

விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை பாதுகாக்க சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் பல டன் நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் சாலைகள் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.  

இவ்வாறு திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் தமிழக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம்.

விஜயகாந்த் கண்டணம்

நினைவு சின்னத்திற்காக செலவு செய்யும் பணத்தை உள்கட்டமைப்பு வசதி, சாலை வசதி, கல்வி வளர்ச்சி, தொழில் துறை வளர்ச்சி, விவசாய வளர்ச்சி போன்றவற்றில் பயன்படுத்தி தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றால் மக்கள் அதனை வரவேற்பார்கள்.

மேலும், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற பல நினைவு சின்னங்கள் உள்ள நிலையில் தற்போது 80 கோடி ரூபாய் செலவில் பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பது அவசியமற்றது.    

மக்களின் வரி பணத்தை வீணடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பலகோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

சொந்த பணத்தில் கட்டுங்கள்

தற்போது மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் நினைவு சின்னம் அமைப்பது ஏற்புடையது அல்ல. நினைவுச் சின்னம் அவசியம் என்றால் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து நினைவு சின்னத்தை அமைத்து கொள்ளவும்.

1996 ஆம் ஆண்டு திரை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்த கருணாநிதிக்கு பொன் விழாவின் போது அவரது புரட்சி வசனங்களுக்கு பரிசாக மிக பிரம்மாண்டமான தங்கப் பேனாவை திரையுலகத்தின் சார்பாக ஏற்கனவே வழங்கியுள்ளதை நினைவு கூறுகிறேன்.

சொந்த பணத்தில் நினைவுச் சின்னம் கட்டுங்கள் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதா?  - விஜயகாந்த் கண்டனம் | Build A Monument With Your Own Vijayakanth

எனவே மீண்டும் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு பதிலாக ஆக்கபூர்வமான பணிகளுக்கு அதனை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.