“என் மாடு பால் கறக்க மாட்டிங்குது” - போலீசில் புகார் அளித்த விவசாயி
தனது எருமை மாடு சரியாக பால் கறக்கவில்லை என கூறி போலீஸ் நிலையத்தில் விவசாயி ஒருவர் புகார் அளித்த சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள நயோகான் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாபுலால் ஜாதவ் நேற்று முன்தினம் அங்குள்ள காவல்நிலையத்துக்கு தனது எருமை மாட்டுடன் சென்றுள்ளார். அங்கு அதிகாரிகளை சந்தித்து அவர் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தனது எருமை மாடு கடந்த சில தினங்களாகவே சரியாக பால்கறக்கவில்லை என்றும், எனவே காவல்துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதனை கண்டு காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விவசாயி பாபுலாலின் எருமை மாடு கடந்த சில தினங்களாக பால் சரியாக கறக்காததால், யாரேனும் மாட்டுக்கு மாந்ரீகம் செய்து சூனியம் வைத்திருக்கலாம் என கிராமத்தினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மேலும் இது குறித்து காவல்நிலையத்துக்கு சென்றால் கட்டாயம் உன் பிரச்னை தீர்க்கப்படும் என கூறியதால் அவர் புகார் மனு அளித்துள்ளார்.
தங்கள் மீது நம்பிக்கை வைத்து காவல்நிலையம் வந்த விவசாயியை அங்கிருந்து அனுப்பாமல், மாட்டுக்கு ஏதேனும் உடல்நலக் கோளாறு இருக்கலாம் எனவே கால்நடை மருத்துவரிடம் சென்று மாட்டை காட்டுமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனிடையே விவசாயி பாபுலால் நேற்று மீண்டும் காவல்நிலையம் வந்து அதிகாரிகளை சந்தித்து தனது மாடு தற்போது பால் கறக்கிறது. தகுந்த ஆலோசனை வழங்கிய போலீசாருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
எருமை மாட்டுடன் போலீஸ் நிலையத்துக்கு விவசாயி சென்ற விவகாரம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, அவருக்கு தகுந்த ஆலோசனை வழங்கிய போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.