பட்ஜெட்டில் புதிய வரி: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகமாகிறது
2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். பட்ஜெட்டில் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதனையடுத்து இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதேசமயம் இது ஏற்கெனவே விதிக்கப்பட்டு வரும் சுங்க வரியில் குறைத்துக் கொள்ளப்படுமா என்பது குறித்து பின்னர் தெரிய வரும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால் தற்போது மத்திய அரசு மீண்டும் கூடுதல் வரியை விதித்து பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் அதிகரித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல், லிட்டர் 88.82 ரூபாய், டீசல் லிட்டர் 81.71 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.