மக்களைப் பற்றிக் கவலைப்படாத பட்ஜெட்: ப. சிதம்பரம் விமர்சனம்

parliament member politician
By Jon Feb 01, 2021 02:05 PM GMT
Report

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் எதிர்வினையாற்றினார்.

தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ப. சிதம்பரம் கூறியது: "முன்னெப்போதும் இல்லாத வகையில் இது மக்களைப் பற்றிக் கவலைப்படாத நிதிநிலை அறிக்கை, மக்களை இவர்கள் கைவிட்டுவிட்டனர்.

நிதிநிலை அறிக்கை உரையைக் கேட்பவர்களுக்குப் புரியாத வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏமாற்றியுள்ளார். குறிப்பாக, பல்வேறு பொருள்களுக்குக் கூடுதல் வரி விதித்திருந்தாலும் அதுபற்றிய எவ்விதக் குறிப்பும் உரையில் இல்லை.

அவர் மக்களை ஏமாற்றியுள்ளார். குறிப்பாக ஏழைகள், உழைக்கும் வர்க்கத்தினர், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளார். ஜிஎஸ்டி வரி விதிப்பில் எந்தக் குறைப்பும் அறிவிக்கப்படவில்லை.

அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே தேர்தல் வரவுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அந்த அறிவிப்புகள் வெறும் ஒதுக்கீடுகளாகவே உள்ளன. அவை திட்டங்களாக மாற ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைக்கு வர நீண்ட காலம் எடுக்கும்" என்றார் சிதம்பரம்.