“ஆகஸ்ட் 13ல் தொடக்கம்...செப்டம்பர் 21ல் நிறைவு” - சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை 29 நாட்கள் நடைப்பெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அவை முன்னவர் துரைமுருகன், மூத்த அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை,விடுதலை சிறுத்தைகள் கட்சி சிந்தனைச்செல்வன், பாஜக நயினார் நாகேந்திரன், பாமக ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் தளி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார்.
மேலும், நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைப்பெறும் என கூறிய அவர்,அரசு விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிறு கிழமை தவிர 29 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படும் என்றும், 23 ஆம் தேதி நீர்வளத்துறை மானியக் கோரிக்கையும், 24 ஆம் தேதி நகராட்சி, 25 ஆம் தேதி ஊரக வளர்ச்சி, 26 ஆம் தேதி கூட்டுறவு மற்றும் உணவு, 27 ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வி உள்ளிட்ட துறை ரீதியான மானிய கோரிக்கைகள் நடைபெற உள்ளது.
முதலமைச்சர் வசமுள்ள காவல்துறை மீதான மானியக் கோரிக்கைகள் செப்டம்பர் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 29 நாட்கள் நடைப்பெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடர், அலுவலக நாட்களில் காலை 10 மணிக்கு பேரவை தொடங்கும் என்றும், தமிழகத்தில் முதல் முறையாக காகிதமில்லாத இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.