பிப்ரவரி 2 ல் கூடும் தமிழக சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு
தமிழக சட்டப்பேரவை வரும் பிப்ரவரி 2ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இந்த கூட்டத் தொடரிலேயே, இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் அல்லது 2வது வாரம் கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் சட்டப்பேரவையில் தமிழக கவர்னர் உரையாற்றுவார்.
கவர்னர் உரையுடன் தொடங்கும் கூட்டம் 3 அல்லது 4 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டின் கூட்டம், ஜனவரி 2வது அல்லது 3வது வாரம் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அதிமுக பொதுக்குழு மற்றும் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, முதல்வர் டெல்லி பயணம் உள்ளிட்ட காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் வருகிற பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி , காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுவார்.
இதையடுத்து சபாநாயகர் தனபால் அந்த உரையை தமிழில் படிப்பார். இருவரும் உரையாற்றி முடித்ததும் அன்றைய கூட்டம் உடனடியாக ஒத்தி வைக்கப்படும். கவர்னர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் 3 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. கலைவாணர் அரங்கத்தில்தான் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதேபோன்று, பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க உள்ள அணைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.