2021 பட்ஜெட் - தனியார் மயமாகிறதா வங்கிகள்?
எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் அரசு வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முதல் படியை மத்திய அரசு எடுக்கும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய பட்ஜெட் பிப்ரவரில் 1-ல் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கொரோனா பரவலின் போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, வறுமை அதிகரிப்பு என பல்வேறு சூழல்கள் காரணமாக மத்தியில் பட்ஜெட் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்த முறை பட்ஜெட் பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றை தனியார்மயமாக்குவதற்கான முதல் படியை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதமாகவே பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தற்போதைய அரசின் அடுத்ததடுத்த முயற்சியாக உள்ளது.
2020-ஆம் ஆண்டில் 10 பொதுத்துறை வங்கிகள் நான்காக இணைக்கப்பட்டது ,தற்போது இந்தியாவில் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இணைப்பின் ஒரு பகுதியாக இல்லாத சில வங்கிகள் பாங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகியன ஆகும்.
இந்த 12 வங்கிகளும் ஒரு சில வங்கிகளில் தனியார்மயமாக்கலுக்கும் இணைந்துகொள்ளவும் சம்மதித்துள்ளன. மீதமுள்ள வங்கிகள், இரண்டாம் நிலை சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அரசாங்கம் அதன் பங்குகளை படிப்படியாகக் குறைக்கும் என்று நிதி அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகியவை முந்தைய சுற்று இணைப்புகளுக்குப் பிறகு அரசுக்கு சொந்தமான நான்கு பெரிய வங்கிகளாகும்.
மேலும், அவை அரசுக்கு சொந்தமான அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.