நடுரோட்டில் மனைவியையும், மாமியாரை குத்தி கொடூரமாக கொலை செய்த நபர்- பதற வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி
தமிழகத்தில் நடுரோட்டில் மாமியார், மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரைச் சேர்ந்தவர் ரவி-பூங்கொடி தம்பதியரின் மகள் மீனா. இவருக்கும் சோனங்குப்பத்தைச் சேர்ந்த மீன்பிடி தொழில் செய்துவரும் நம்புராஜ் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நம்புராஜ் காது கேட்காத மாற்றுத்திறனாளி.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நம்புராஜ், தனது மனைவி வேறு ஒருவருடன் ரகசிய உறவில் இருப்பதாக கடந்த சில நாட்களாக சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதனால், இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அதனால் கடந்த ஒரு வருடமாக மீனா குழந்தைகளுடன் தனது தாய் பூங்கொடி வீட்டிற்கு சென்று அங்கேயே வசித்து வருகிறாள். தன்னுடன் வீட்டுக்கு வரும்படி மனைவி மீனாவை அடிக்கடி அழைத்திருக்கிறார் நம்புராஜ்.
அவர் மறுக்கவே, குழந்தைகளைப் பார்க்க தனது மாமியார் பூங்கொடியின் வீட்டுக்கு அடிக்கடி சென்றிருக்கிறார். அப்போதெல்லாம் இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை இரண்டாவது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தாயுடன் மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்திருக்கிறார் மீனா.
அதன்படி குழந்தையை பூங்கொடி தூக்கிக்கொண்டு நடக்க, மீனா அவருடன் சென்றிருக்கிறார். முதுநகர் சஞ்சீவிராயன் கோயிலைக் கடக்கும்போது அங்கு வந்த நம்புராஜ் தனது மாமியாருடன் பேசும்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது பின்புற இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பூங்கொடியின் முதுகில் சரமாரியாகக் குத்தியுள்ளார் நம்புராஜ். அதிர்ச்சியடைந்து அதைத் தடுக்க முயன்ற மனைவி மீனாவையும் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் அவர் நிலை தடுமாறினார்.
குழந்தையுடன் தப்பியோட முயற்சி செய்த பூங்கொடியை கழுத்தில் மீண்டும் துள்ளத்துடிக்க குத்தியுள்ளார் நம்புராஜ். அதனையடுத்து, சுதாரித்து எழுந்த மீனா தனது தாயைக் கத்தியால் குத்துவதை தடுக்க முயன்றிருக்கிறாள். அதனால் மீனாவின் கழுத்திலும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார் நம்புராஜ்.

சிறிது நேரத்தில் அதே இடத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது.
அதையடுத்து தப்பியோடி தலைமறைவாக இருக்கும் நம்புராஜைத் தேடி வருகிறார்கள். இந்த கொலை பதிவு அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சி சமூக வலைளங்களில் பரவி வருகிறது.