‘எல்லோரையும் பாலியல் வன்கொடுமை செய்வேன்’ - கொலைவெறி துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரின் பகீர் பின்னணி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21பேர் உயிரிழந்தனர்.
சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ராப் பள்ளியில் 18 வயது இளைஞரான சால்வடோர் ரமொஸ் கையில் துப்பாக்கியுடன் 4-ம் வகுப்புல் நுழைந்து அங்கிருந்த சிறுவர்களை சரமாரியாகச் சுட ஆரம்பித்தான்.
இந்த துப்பாக்கிச்சூடில் 19 குழந்தைகள் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 21 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டனர். இதனிடையே பள்ளிக்கூடத்துக்கு அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு விரைந்தனர்.
அவர்கள் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த இளைஞர் போலீசாரையும் துப்பாக்கியால் சுட்டார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடுச் சட்டம் கடுமையாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அந்த இளைஞர் எப்படி பள்ளி வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்தார், காரணமே இல்லாமல் 21 பேரை ஏன் சுட்டுக்கொன்றார் என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சால்வடோர் ரமோஸ் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சால்வடோருக்கு 3 வயது இருக்கும்போதே அவரின் பெற்றோர்கள் விவாகரத்து பெற்றுவிட தாயின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். ஆனால் தனது தாயின் போதை பழக்கம் சால்வடோருக்கு போதிய அன்பை கொடுக்கவில்லை.
இதனால் அவர் தனது பாட்டி வீட்டிலேயே வளர்ந்திருக்கிறார். மேலும், பள்ளிகளில் புல்லியிங் என்றழைக்கப்படும் கேலி , கிண்டலுக்கும் சால்வடோர் ஆளாகியிருக்கிறார்.
அமெரிக்காவில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் துப்பாக்கி வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பள்ளியில் இந்த கொலைவெறி தாக்குதலை நடத்த திட்டமிடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் , தான் ஒரு துப்பாக்கி வாங்கியிருப்பதை சால்வடோர் மறைமுகமாக பதிவிட்டதாக அவரது நண்பர்கள் வட்டம் தெரிவித்துள்ளது.
மேலும் டிண்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆப்களில் சால்வடோர் தொடர்பில் இருந்துவந்த அனைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரின் கொடூரமான மற்றொரு முகம் வெளியில் தெரியவந்துள்ளது.
அதாவது, ஆரம்பத்தில் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி பேசும் சால்வடோர், ஒரு கட்டத்திற்கு மேல் பாலியல் ரீதியிலான வக்கிர பேச்சுக்களை பகிர்வதோடு பாலியல் சார்ந்த கொடூர புகைப்படங்கள், கிண்டல் செய்யும் வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். மேலும், அவரோடு பேச மறுத்த இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் என அனைவரிடமும் தன்னிடம் பேசாவிட்டால் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து விடுவேன் என கூறி மிரட்டியிட்ருக்கிறார்.
அதேபோல் அதிகாரிகள் கைப்பற்றிய ஆன்லைன் வீடியோ பதிவு ஒன்றில், "இந்த உலகில் உள்ள அனைவரும் பாலியல் வன்கொடுமைக்கு தகுதியானவர்கள்" என சால்வடோர் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், சால்வடோர் இளம் வயது முதலே பெற்றோர்களின் அரவணைப்புக்காக ஏங்கியிருக்கலாம், நிறைய கொடுமைகளை அனுபவித்திருக்கலாம் , அவருக்கென சில ஏக்கங்கள் இருந்திருக்கலாம், அவை எல்லாம் தான் அவரை இப்படி கொடூர வக்கிர சிந்தையுடைய இளைஞராக மாற்றியிருக்கலாம் என கூறினர்.
மேலும் சால்வடோர் ஏன் அந்த குறிப்பிட்ட பள்ளியை குறி வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.