பெற்ற மகளை மிரட்டி கர்ப்பமாக்கிய தந்தை; கருக்கலைப்பு செய்த தாய் - கொடூர சம்பவம்!
கர்ப்பமாக்கிய தந்தை
அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (37). இவர் லாரி ஓட்டுநராக இருக்கிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், 12ம் வகுப்பு படிக்கும் தனது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து மகளின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்ட தாய்க்கு இதுகுறித்து தெரியவந்ததும், விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார்.
இதில் இறந்து பிறந்த ஆண் சிசுவை சாக்குப் பையில் சுற்றி வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவிக்கு உதிரப்போக்கு நிற்காததால் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
3 பேர் கைது
மருத்துவர் பரிசோதித்த போது மாணவிக்கு கருக்கலைப்பு நடந்திருப்பதை அறிந்துள்ளார். உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்படி குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் செல்வி அகஸ்தியர் செந்துறை வி.ஏ.ஓ. வாழவந்தானுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து வி.ஏ.ஓ. செந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட 7 மாத சிசுவின் உடலை தோண்டி எடுத்தனர்.
பின்னர் மாணவியின் கொடூர தந்தை, மாத்திரை வாங்கி கொடுத்த தாயார், கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மெடிக்கல் உரிமையாளர் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.