உடல் எடை குறையாததால் சோகம் - அண்ணன் தங்கை எடுத்த விபரீத முடிவு
உடல் எடை குறையாததால் அண்ணன் தங்கை விபரீத முடிவெடுத்துள்ளனர்.
உடல் பருமன்
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த இப்ராகிம் பாட்சா(54) டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சம்சத் பேகம்(50) என்ற தங்கை உள்ளார்.
அண்ணன் தங்கை இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தனர். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்தும் அவர்களின் உடல் எடை குறையவில்லை.
தங்கை உயிரிழப்பு
இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் கோவைக்கு வந்த இவர்கள், ஆயுர்வேத சிகிச்சை பெற வந்து இருப்பதாக கூறி அங்குள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
ஆனால் அவர்கள் அறையை விட்டு வெளியே வராத நிலையில் நேற்று முன்தினம் வெளியே வந்த இப்ராகிம் பாட்சா, ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்வதாக வரவேற்பு அறையில் இருந்தவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றிருக்கிறார்.
வெகுநேரமாகியும் அவர் திரும்பி வராததால், சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்த போது அறை பூட்டப்பட்டு இருந்தது. உடனே ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சம்சத் பேகம் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்திருக்கிறார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சிக்கிய கடிதம்
அந்த தகவலின் அடிப்படையில் காட்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர். இதில் சம்சத் பேகம் அதிகளவில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மேலும் உடல் அருகில் இருந்த கடிதத்தில், "நானும், அண்ணனும் உடல்பருமனால் அவதிப்பட்டு வந்தோம். எனவே எங்களுக்கு இப்படி வாழ பிடிக்கவில்லை. அதனால் எங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறோம். இருவரின் உடல்களையும் ஒன்றாக அடக்கம் செய்யுங்கள் என எழுதப்பட்டு இருந்ததாம்.
ரயில் நிலையம்
இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சம்சத் பேகத்தின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அண்ணன் இப்ராகிம் பாட்சா அறையை விட்டு வெளியேறியது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரின் கார் எண் மற்றும் GPS உதவியுடன் தேடிய போது, அவரது கார் கோவை ரயில் நிலையம் அருகே இருப்பது தெரிய வந்தது.
உடனே காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது காருக்குள் இப்ராகிம் பாட்சா இருந்துள்ளார். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், குறைந்த அளவிலான தூக்க மாத்திரையை விழுங்கியதால் இறக்கவில்லை, எனவே பிளேடை உடைத்து விழுங்கியதாகவும், மேலும் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள இங்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உடனே அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் எடை குறையாததால் உயிரை மாய்த்து கொள்ள முடிவெடுத்த சம்பவம் கோவை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.