உச்சத்தை தொட்ட பிராய்லர் கறிக்கோழி விலை ... ஒரு கிலோ எவ்வளவு?
தமிழகத்தில் நாள் ஒன்றிற்கு மட்டும் இரண்டரை லட்சம் கிலோ கோழைி தேவைப்படும் நேரத்தில் தற்போது கோழியின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
கோழி இறைச்சி விலை
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் செய்த போராட்டத்தால், கறிக்கோழி விலை தற்போது இதுவரை இல்லாத உச்சத்திற்கு சென்றுள்ளது.
புரோட்டின் நிறைந்த பிராய்லர் கறிக் கோழி, இன்று பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது. அதிலும் தெருவுக்கு ஒரு பிரியாணி கடைகள் இருப்பதால் கறிக்கோழியின் தேவை அதிகமாக உள்ளது.
தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் ஏராளமான கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி நிறுவனங்களிடம் இருந்து கோழிக்குஞ்சுகளை பெற்று 45 நாட்கள் வளர்த்து கொடுக்கும் பணி செய்து வருகின்றனர்.

இதற்கு கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 காசு மட்டுமே கூலியாக கொடுக்கப்படுகின்றது. ஆனால் பணியாட்களின் கூலி உயர்வு, தேங்காய் நார் விலை உயர்வு என பண்ணை நடத்துவதற்கான செலவுகள் அதிகமாக இருப்பதால் ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் வழங்கக் கோரி கறிக்கோழி பண்ணை விவசாயிகள் ஜனவரி 1 ஆம் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு இரண்டரை லட்சம் கிலோ கோழி இறைச்சி தேவைப்படுகின்றது. ஆனால் தற்போது இந்த போராட்டத்தின் காரணமாக கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி 94 ரூபாயாக இருந்த கொள்முதல் விலை தற்போது 145 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் கறிக்கோழி ஒரு கிலோ விலை 380 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதன்போது பேசிய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பல்வேறு கறிக்கோழி வளர்ப்பு சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக கூறினார்.
கறிக்கோழி வளர்ப்பு ஒப்பந்தங்கள், கால்நடை பராமரிப்புக்கு கீழ் வருவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதி அளித்தார்.