இலவச பிரியாணி கிடைக்காத ஆத்திரத்தில் கடாயில் குண்டு வீசிய மர்ம நபர்கள்

people unknown bomb biriyani
By Praveen Apr 18, 2021 11:19 PM GMT
Report

சென்னை அடுத்த, திருமழிசையில், 'ஓசி' பிரியாணி கிடைக்காத ஆத்திரத்தில், கடையில் குண்டு வீசிய ஆசாமிகள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை அடுத்த, வெள்ளவேடு, திருமழிசையைச் சேர்ந்தவர் அருணாச்சலம், 40. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் திருமணம் மண்டபம் அருகே, பிரியாணி கடை வைத்துள்ளார். நேற்று மாலை, இவரது கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ரவுடி பெயரில், இலவசமாக பிரியாணி கேட்டுள்ளனர்.

அருணாச்சலம் தர மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த இருவரும், சிறிது நேரத்தில், பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். பின் அருகிலிருந்த வீட்டின் மீதும், ஒரு பெட்ரோல் பாட்டிலை வீசி உள்ளனர்.

இது குறித்து, அருணாச்சலம் அளித்த புகாரையடுத்து, திரும ழிசை, உடையார்கோவில் காலனியைச் சேர்ந்த எபிநேசன், 34 மற்றும் அவரது நண்பர்கள் உட்பட, மூவர் மீது, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

எபிநேசன் மீது, பல்வேறு வழக்குகள் இருப்பதாக, வெள்ளவேடு போலீசார் தெரிவித்தனர்.மேலும், எபிநேசன் சொல்லித்தான், கூட்டாளிகள் இருவரும், பிரியாணி வாங்க சென்றது தெரியவந்தது.